
சிறப்பான வாழ்வு தரும் திருவோண விரதம்
27 நட்சத்திரங்களில், திருவாதிரை நட்சத்திரம் சிவனுக்குரியது. அதேபோல திருவோண நட்சத்திரம் பெருமாளுக்குரியதாக சாஸ்திரம் கூறுகிறது.
இந்த திருவோண நட்சத்திரத்திலே நாம் விரதம் இருந்து பெருமாளை மனமுருக வேண்டி வழிபடுவோமாயின் வாழ்வில் உயரிய நிலையை அடைவோம் என்பது சத்திய வாக்காகும்.

திருவோண விரத வரலாற்றை நாம் பார்ப்போமாயின் பெருமாளின் தசாவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரத்தில் மகாபலி சக்கரவர்த்தியிடம் திரிவிக்கிரமனாகிய பெருமாள் மூன்றடி மண் கேட்டது இந்த திருவோண நட்சத்திரத்தில். அத்துடன் முதல் இரு அடிகளை வானையும் மண்ணையும் அளந்த பெருமாள் மூன்றாவது அடியை மகாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து அவரை பாதாளத்துக்கு தவம் செய்யுமாறு அனுப்புகிறார். அங்கே தவம் செய்து கொண்டிருக்கும் மகாபலி சக்கரவர்த்தி ஒவ்வொரு வருடமும் ஆவணி ஓணம் திருநாளன்று தனது மக்களின் களிப்பான வாழ்க்கையை கண்டு இன்புற வருகிறார் என்பது ஐதீகம். அப்படி வரும் சக்கரவர்த்தியை மகிழ்விக்க மலையாள தேசத்திலே மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடுகின்றனர். அதேபோல மார்க்கண்டேய மகரிஷியின் மகளான பூமாதேவியை ஒப்பிலியப்பன் மணமுடிக்க ஆசைப்பட்டு பெண் கேட்டது பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தில், அதேபோல அவர்களின் திருமணம் நடந்ததும் ஐப்பசி மாத திருவோண நட்சத்திரத்தில். இதனாலேயே இந்த திருவோண நட்சத்திரம் மிகவும் பெருமை வாய்ந்ததாகவும், விசேஷமானதாகவும் கொள்ளப்படுகிறது.

ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில் விரதம் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அப்படி அது முடியாதவர்கள் மாதந்தோறும் வருகின்ற திருவோண நட்சத்திரத்தில் கூட விரதம் இருந்து பெருமாளை வழிபட முடியும். இந்த பிறப்பிலே ஒருமுறையாவது திருவோண நட்சத்திரம் விரதம் அனுட்டிப்பதன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் நாம் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த திருவோண விரதத்தை எவ்வாறு அனுஷ்டிப்பது என்றால், அந்த திருவோண நட்சத்திரம் கூடிவரும் நாள் அன்று காலையிலே புனித நீராடி துவைத்து உலர்ந்த ஆடை அணிந்து பெருமாள் கோயிலுக்கு சென்று துளசி மாலை சாற்றி வழிபடுவது சிறப்பு. அத்துடன் விஷ்ணு சாஸ்திர நாமம் சொல்லி வழிபட முடியும். கோயிலுக்கு போக இயலாதவர்கள் வீட்டு பூஜை அறையில் பெருமாள் படத்திற்கு பொட்டு இட்டு விளக்கேற்றி துளசி மாலை அணிவித்து பஞ்ச பாத்திரத்தில் நீர் விட்டு அதில் சிறிது துளசி, மஞ்சள் பொடி, பச்சை கற்பூரம் சேர்த்து வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்ந்து வலது கையை நீரின் மேலாக வைத்து ஓம் ஸ்ரீ மாய மாலனே நமஹ என 108 முறை ஜெபித்து பின் அந்நீரை துளசி தீர்த்தமாக பருகி காலை வழிபாட்டை ஆற்ற முடியும். அதே போல மதிய நேரத்தில் மதிய போசனமாக உப்பில்லாத உணவு பொருட்களை உட்கொள்ளலாம். அதன் மூலம் தோஷங்கள் எதுவும் ஏற்படாது. ஒப்பிலியப்பனின் பரிபூரண அருளை பெற முடியும். மாலையிலே நெய் தீபம் ஏற்றி பெருமாள் ஸ்தோத்திரம் சொல்லி அலங்கார பிரியமான பெருமாளுக்கு அலங்கரித்து பூஜை செய்து வழிபட வேண்டும். இரவில் விரதம் இருப்பவர்கள் பால் பழம் உண்டு விரதத்தை பூர்த்தி செய்ய முடியும். அத்துடன் விரதம் அனுட்டிக்கும் அன்று இரவு சந்திர தரிசனம் செய்வது சிறப்பு. இவ்வாறு சந்திர தரிசனம் செய்வதன் மூலம் சந்திர தோஷத்தில் இருந்து நாம் விடுபட முடியும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அதேபோல திருவோண நட்சத்திர காயத்ரி மந்திரமான
ஓம் மஹா ஸ்ரோணாய வித்மஹே
புண்ய ஸ்லோகாய தீமஹி
தன்னோ ஸ்ரோண பிரசோதயாத்
என்ற மந்திரத்தை உச்சரித்து வணங்கியும் நாம் வழிபட முடியும்.

இந்த திருவோண விரதம் இருப்பதன் மூலம் எந்த கடைநிலையில் எமது வாழ்க்கை இருப்பினும் வாழ்வின் உயரிய வளர்ச்சியை பெற்று நாம் உயர் பதவியை அடைய முடியும். அத்துடன் திருவோண விரதம் ஒருமுறை அனுஷ்டிப்பதன் மூலம் நாம் ஏழு ஜென்மங்களுக்கும் 16 வகை செல்வங்களையும் பெற்று ஒப்பிலியப்பனின் பரிபூரண அருள் ஆசியுடன் ஈடில்லா பெருவாழ்வு வாழலாம்.