சகல ஐஸ்வர்யங்களும் அருளும் ஸ்ரீ ராம ஜயம்
ஸ்ரீ ராம ஜயம்
ஸ்ரீ ராம ஜயம்
ஸ்ரீ ராம ஜயம்!
இந்த ஸ்ரீ ராம ஜயம் என்ற மந்திரமானது உருவாகிய விதம் மிகவும் சிறப்பானது. போரிலே ராவணனை வென்ற ஸ்ரீ ராமர் இந்த செய்தியினை எப்படியாவது தனது பத்தினி ஜானகிடம் சேர்ப்பிக்க உவகை கொண்டார். இந்த செய்தியை சேர்ப்பிப்பதற்கு உத்தமமான ஆளாக ஆஞ்சநேயரை தேர்ந்தெடுத்தார். அந்த ராமபிரானின் ஆணையை ஏற்று சீதாப்பிராட்டி இருக்கும் இடம் வந்த ஆஞ்சநேயர் தான் சொல்ல வந்த செய்தியை, மிகுந்த சந்தோஷ மிகுதியால் சொல்ல முடியாமல் ஆனந்த கண்ணீருடன் கண்ணீர் மல்க நின்றார். இதைக்கண்ட ஜானகிக்கு அனுமன் ஏன் கண்கலங்குகின்றார் என்ற கவலை ஏற்பட்டது. இதனை புரிந்து கொண்ட ஆஞ்சநேயப் பெருமான் ராமபிரான் போரில் வெற்றி பெற்றார் என்ற செய்தியை ‘ஸ்ரீ ராம ஜயம்! ஸ்ரீ ராம ஜயம்! ஸ்ரீ ராம ஜயம்!‘ என்று கூவி கூவிக் சீதாதேவியின் முன்னால் இருந்த மணலில் எழுதி காட்டினார். இதனை கேட்ட சீதா தேவியும் சந்தோசமடைந்தாராம்.
ரா என்றால் மந்திரம் என்றும் மா என்றால் எமது மனதில் அன்பை நிறைய செய்கிறது என்றும் பொருள். வால்மீகி முதலில் மரா என்றே உச்சரித்தார். மரா என்றாலும் ராம என்றாலும் பாவங்களை போக்கக்கூடியது என்று அர்த்தம் கொள்ளப்படுகிறது. அதேபோல் ராம என்று சொல்லுக்கு வேறு அர்த்தங்களும் உள்ளன. ரா என்றால் இல்லை, மன் என்றால் தலைவன்; அதாவது தனக்கு மேல் தலைவன் இல்லாதவன் என்ற பொருள் கூட இதற்கு உள்ளது. அதேபோல ரமா என்றால் லட்சுமி தாயாரை குறிக்கும். ராம என்றால் பாவங்களை போக்கக்கூடியது என்றும் பொருள் கொள்ளலாம். ஆகவே நாம் இந்த ராம ஜயத்தை உச்சரிப்பதல் ராமர் ,சீதா பிராட்டி, ஆஞ்சநேய பெருமான் ஆகிய மூன்று தெய்வங்களினதும் பரிபூரண அருளையும் நாம் பெற முடியும்.
சங்க காலத்திலிருந்து தமிழர்கள் ராமனை வணங்கியுள்ளார்கள். இதற்கு ஆதாரங்கள் கூட கிடைத்துள்ளன. சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் ராம நாமத்தின் பெருமையை எடுத்து கூறுகிறார்.
மூவுலகும் ஈர் அடியான் முறை நிரம்பாவகை முடியத்
தாவிய சேவடி சேப்ப, தம்பியொடும் கான் போந்து,
சேர அரணும் போர் மடிய, தொல் இலங்கை கட்டு அழித்த
சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே?
திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே?” என்று ராம பிரான் திருமாலின் அவதாரம் என தெளிவுற பாடியுள்ளதை நாம் அவதானிக்கலாம்.
ஒருவர் இறக்கும் தறுவாயில் ராம நாமத்தை கேட்டுக்கொண்டால் அவருக்கு மறுபிறவி இல்லை என்பது அடியார்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதேபோல தமது இறுதி காலத்தை காசியிலே போக்க வேண்டுமென்று அங்கு வசிப்பவர்கள் கூட இறக்கம் தறுவாயில் அவர்கள் காதுகளில் அந்த காசி விஸ்வநாதபெருமானே ராம நாமத்தை உச்சரித்து அவர்களை முக்தி அடையச் செய்கிறார் என்ற நம்பிக்கையும் தமிழ் மக்கள் மத்தியில் நிலவுகிறது.
ஸ்ரீ ராம ஜயம் என்று தாரக மந்திரத்தை 108 முறை அல்லது 1008 முறை அடியவர்கள் தங்கள் விருப்பத்திற்கு வசதிக்கு ஏற்ப எழுதலாம். தினமும் 108 முறை எழுதுவது சிறப்பு என கொள்ளப்படும். இதனைத் தொடர்ந்து எழுதுபவர்களுக்கும் பாராயணம் செய்பவர்களுக்கும் ஆஞ்சநேயப் பெருமாளின் அருள் கிடைப்பதுடன் எண்ணிய செயல்கள் அனைத்திலும் சித்தி ஏற்படும். ஸ்ரீ ராம ஜயம் எழுதுவதற்கு குறிப்பிட்ட நேரம், குறிப்பிட்ட இடத்திலிருந்து எழுத வேண்டும் என்ற இந்த விதிகளும் இடம் பெறவில்லை. அது ஒரு மந்திர உச்சாடனமாகவே கொள்ளப்படுகிறது. அதை நாங்கள் சுத்தி செய்த இடத்திலிருந்து எழுதுவது சிறப்பு. இந்த நேரத்தில் இந்த குறிப்பிட்ட இடத்தில் இருந்து எழுத வேண்டும்என்ற எந்த வரைமுறைகளும் இல்லாமல் நமக்கு விரும்பியபடி செய்யலாம். இந்த ராமஜயத்தை எப்படி எழுதுவது? எப்படி ஆரம்பிப்பது? என்பது தொடர்பில் பார்ப்போம். முதலில் இந்த ராமஜயத்தை எழுதுவதற்கு ஒரு கொப்பியோ, புத்தகமோ எடுத்துக்கொள்ள வேண்டும். எடுத்துக்கொண்ட புத்தகத்துக்கு மஞ்சள் அல்லது சந்தனம், அல்லது குங்குமத்தினால் நான்கு மூலைகளிலும் பூசிக்கொள்ள வேண்டும். பூசிக்கொண்டு ராம சிந்தனையுடன் ராம நாமத்தை ஜெபித்தபடி நமது கோத்திரம், நட்சத்திரம்,ராசி மற்றும் பிரார்த்தனை ஆகியவற்றை எழுத வேண்டும்.. ராமனை முழு மனதுடன் தியானித்துக் கொண்டு நாம் எழுத ஆரம்பிக்கலாம். தினமும் 108 முறை எழுதுவது சிறந்தது, அதையும் குறித்த ஒரு நேரத்திலேயே தினமும் எழுதுவதாக வைத்துக் கொண்டால் இன்னும் சிறப்பு. நாம் எழுதும் போதும் ஸ்ரீ ராம ஜயத்தை உச்சரிக்கும் போதும் ஆஞ்சநேயர் நம்முடன் அருவமாக வந்து எம்முடன் உட்கார்ந்து எம்முடன் ராமரை பிரார்த்திப்பார் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
செல்வ வளம் பெருக பச்சை நிறத்திலும், எதிரிகளின் பாதிப்பு, கண் திருஷ்டி விலக, செய்வினை நீங்க சிகப்பு நிறத்திலும், சனி தோஷம், நவக்கிரக தோஷம் மற்றும் தசா புத்தி தோஷம் ஆகியவை நீங்க கருப்பு நிறத்திலும், நோய் விலகி ஆரோக்கியம் பெற பொது பிரார்த்தனை நிறைவேற நீல நிறத்திலும் ஸ்ரீ ராம ஜயத்தை எழுத சிறந்த பலன் உண்டாகும் என்பது ஐதீகம்.
ஸ்ரீ ராம ஜய ராம ஜய ஜய ராம்!!!