
அபூர்வ யோகங்கள் அள்ளித் தரும் அபிஜித்!
ஜாதக ரீதியாக நாமறிந்த வரையில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் 4 பாதங்களாக பிரிக்கப்பட்டு 1 ,2, 3, 4 என குறிக்கப்பட்டுள்ளன. 27 நட்சத்திரங்களும் 12 ராசிகளில் அடக்கப்பட்டு ஒருவர் பிறந்த ராசி,நட்சத்திரம் என்பன கணிக்கப்படுகிறது.
இந்த 27 நட்சத்திரங்களுக்கு மேலதிகமாக 28 ஆவது நட்சத்திரமாக அபிஜித் நட்சத்திரமானது நட்சத்திர பட்டியலில் இடம் பெறாத சக்தி வாய்ந்த நட்சத்திரமாகும். ஜித் என்றால் வெற்றி; அபிஜித் என்றால் உடனடி வெற்றியை தர கூடியது என பொருள் படும். இந்த அபிஜித் நட்சத்திரமும் அதிஷ்டத்தையும், வெற்றியையும் தரக்கூடியதாக நம்பப்படுகிறது.
இந்த நட்சத்திரமானது உத்தராட நட்சத்திரத்துக்கும், திருவோண நட்சத்திரத்துக்கும் இடையில் வருவதாக கொள்ளப்படும்.
உத்தராட நட்சத்திரத்தில் 3 ஆம் 4 ஆம் பாத நேரமும், திருவோண நட்சத்திரத்தில் முதலாம் பாத நேரமும் அபிஜித் நட்சத்திர காலமாகும். இது மகர ராசிக்குரியது.

சிவனுக்குரிய நட்சத்திரமாக திருவாதிரையும், விஷ்ணுவுக்குரிய நட்சத்திரமாக திருவோணமும், பிரம்மாவுக்குரிய நட்சத்திரமாக இந்த அபிஜித் உம் கொள்ளப்படுகிறது. இந்த அபிஜித் நட்சத்திர காலத்தில் நான்முகன் 14 லோகங்களை வெற்றி பெற்றதாகவும், முக்கண்ணன் முப்புரங்களை எரித்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. அபிஜித் நட்சத்திர நேரமானது சூரிய உதயத்தில் இருந்து ஆறு மணி நேரம் கழித்து வருவதாக கொள்ள படுகிறது. சாதாரணமாக சூரிய உதயமானது காலை 5.45- 6.15 மணி வரை ஏற்படலாம் என கொள்ளப்படுகிறது. இதன்படி அபிஜித் காலம் நண்பகல் 11.45 -12.15 வரை கொள்ளப்படுகிறது.
சூரிய உதயகாலம், அபிஜித் முகூர்த்த காலம், சூரிய அஸ்தமன காலம், இம்மூன்று காலங்களும் தோஷம் அற்ற முகூர்த்தங்களாகும். ராகு காலம், எமகண்டம், அட்டமி, நவமி, கரிநாள் போல அன்றி இந்நேரம் எவ்விதமான தோஷமும் இல்லாத நேரமாக கொள்ளபடுகிறது. இந்நேரத்தில் தொடங்கப்படும் காரியங்கள் யாவும் வெற்றியை தரக்கூடியதாகவும், மேலும் மேலும் உயர்வை ஏற்படுத்துவதாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.