
கோடீஸ்வர யோகம் தரும் குளிகன் நேரம்
நாம் எந்த ஒரு நல்ல காரியம் செய்ய முதலும் அந்த நேரத்தில் ராகு காலம், எமகண்டம் குறுக்கிடுகின்றதா என்பதை பார்ப்போம். அதேபோல சில செயல்களை செய்ய தொடங்கும் போது குளிகை நேரம் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. இந்தக் குளிகன் எனப்படுபவர் சனீஸ்வரனுக்கும் ஜேஷ்டாதேவிக்கும் பிறந்த குழந்தை. இவரது ஜனனம் மிக சிறப்பு வாய்ந்தது.

ராவணனின் மனைவி மண்டோதரி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும்போது அசுர குருவான சுக்ராச்சாரியாரை இராவணன் சந்திக்கிறார். யாராலும் வெல்ல முடியாத, அழகும், அறிவும்கொண்ட மகனே தனக்குப் பிறக்க வேண்டும் என்றும், அதற்கு என்ன வழி என்றும் கேட்டார். அதற்குப் பதில் அளித்த சுக்கிராச்சாரியார், “கிரகங்கள் அனைத்தும் ஒரே கட்டத்தில் இருக்கும் நேரத்தில் உனக்குப் பிள்ளை பிறந்தால், அந்தக் குழந்தை நீ விரும்பிய எல்லாச் சிறப்புகளும் கொண்டதாக இருக்கும்’’ என்று யோசனை சொன்னார். அவ்வளவுதான், நவக்கிரகங்களையும் சிறைப் பிடித்து, ஒரே அறைக்குள் அடைத்துவிட்டார் ராவணன். ஒரே அறையில் இருந்த கிரகங்கள் யாவும் தவித்துப்போயினர். இந்த யோசனையைச் சொன்ன குருவை நினைத்து வருந்துகின்றனர். தாங்கள் அனைவரும் ஒரே கட்டத்தில் இருப்பதால் ஏற்ப ஏற்படப் போகும் தீமைகளை எண்ணி கவலை கொள்கின்றனர். அதே நேரம் மண்டோதரி பிரசவ வலியால் துடிக்கின்றாள். ஆனாலும் குழந்தை பிறக்கவில்லை. இதற்கு தாங்கள் தான் காரணமாக இருப்போம் என நினைத்து ராவணன் தம்மை தண்டித்து விடுவாரோ என நினைத்து இது குறித்து சுக்கிராச்சாரியாரிடம் ஆலோசனை கேட்டனர். “இந்தச் சிக்கலில் இருந்து விடுபடவேண்டுமானால், உங்கள் ஒன்பது பேரைத் தவிர, நல்ல செயல் புரியவென்றே இன்னொரு புதியவனை சிருஷ்டித்து, ஒவ்வொரு நாளிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட நேரமாக மாற்றிக் கொடுத்தால், உங்களுக்கு நன்மை உண்டாகும். அவனை சிருஷ்டிக்கும் அதே வேளையிலேயே மண்டோதரிக்கு சுகப்பிரசவம் உண்டாகும். நீங்களும் விடுதலை ஆகலாம்’’ என்றார். அதன்படி சனீஸ்வர பகவான் சிறையில் இருந்தபடியே தனது சக்தியால் ஜேஷ்டாதேவிக்கு ஒரு மகன் பிறக்கச் செய்தார். குளிகன் பிறந்த அதே நேரம் மண்டோதரிக்கும் அழகான ஒரு மகன் பிறந்து அவனுக்கு `மேகநாதன்’ என்ற பெயரும் சூட்டப்பட்டது. தான் பிறக்கும்போதே நல்லதை நடத்திவைத்ததால், குளிகன் நவகிரகங்களால் பாராட்டப்பட்டார்.
`குளிகை நேரம்’ என்றே தினமும் பகலிலும் இரவிலும் ஒரு நாழிகை நேரம் கொடுக்கப்பட்டது. அந்த நேரம், `காரிய விருத்தி நேரம்’ என ஆசீர்வதிக்கவும்பட்டது. அந்த குளிகை நேரம் சுப காரியங்கள் செய்வதற்கு ஏதுவான நேரமாக கொள்ளப்படுகிறது. குளிகை நேரத்திலே நாம் ஒரு காரியத்தை செய்தால் அச்செயல் திரும்பத் திரும்ப நமது வாழ்வில் நடந்து கொண்டிருக்கும் என்பது சிறப்பு. திருமணம் தவிர்ந்த அனைத்து சுப காரியங்களும் இந்த நேரத்தில் செய்யலாம். திருமணம் என்பது ஒரு முறை தான் நடத்த வேண்டும் என்பதால் குளிகை நேரத்தில் திருமண நடத்துவது நன்றன்று. பெற்றகடனை அடைத்தல், பிறந்தநாள் கொண்டாட்டம், திருமண நாள் கொண்டாட்டம் போன்ற நல்ல காரியங்கள் செய்வதால் அவை எந்த தடையும் இன்றி நடப்பது மட்டுமின்றி இது போன்ற நல்ல நிகழ்ச்சிகள் தொடர்ந்து இடம்பெற்று கொண்டிருக்கும். இந்த குளிகை நேரத்திலே பூமி, இடம், வாகனம் வாங்குதல், கிரகப்பிரவேசம் செய்தல் ஆகியனவும் செய்தல் பொருத்தமானது.
குளிகை நேரத்திலே செய்யக்கூடாத காரியங்களில் மிக முக்கியமானது ஈம கிரியைகள். ஒருவர் இறந்த கணம் தொடக்கம் அவரை தகனம் செய்யும் வரை குளிகன் நேரம் குறுக்கிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல கடன் வாங்குதல், நகை அடகு வைத்தல் என்பன செய்வதையும் தவிர்த்தல் நல்லது. குளிகனை சனிக்கிழமைகளில் மாலை வேளைகளில் வணங்கலாம். சனீஸ்வரனை வணங்கும்போது மனதினில் குளிகனை எண்ணி ‘கும் குளிகாயநம:’ எனும் குளிகனின் பீஜாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கி நற்பலன்களை பெற்று பெரு வாழ்வு வாழ்வோம்.